குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து டெல்லி ஜுமா மசூதி முன் போராட்டம்

குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து டெல்லி ஜுமா மசூதி முன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பீம் ஆர்மி என்னும் அமைப்பின் சார்பில் குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து டெல்லி ஜுமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்தக் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்தப் பேரணிக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் தடையை மீறி பீம் ஆர்மி அமைப்பினர் ஜுமா மசூதி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு வந்த பொதுமக்களும் இளைஞர்களும் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர். பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தைக் கைது செய்யக் காவல்துறையினர் முயன்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரைத் தடுத்துவிட்டதுடன் அவரை அந்த இடத்திலிருந்து வேறிடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன்பின்னும் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை அங்கிருந்து வெளியேறப்போவதில்லை என அவர்கள் முழக்கமிட்டனர்.

Exit mobile version