மேட்டூர் அணையின் காவேரி கரையோர பகுதிகளில் அதிகளவில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து அணையின் அடிவாரம் துவங்கி காவேரி கரையோரப் பகுதிகளான தூக்கணாம்பட்டி, மாதையன்குட்டை, காவிரி கிராஸ், செக்கானூர் போன்ற பகுதிகளில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளன.
இதனால் அப்பகுதியில் உள்ள தண்ணீர் மாசுபட்டுள்ளதால் இந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகாய தாமரை செடிகளிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் கரையோர பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆகாய தாமரையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.