சினிமா டிக்கெட்டை ஆன் லைன் மூலம் தமிழக அரசே விற்பனை செய்யும் முடிவைத் திரைத்துறையினர் வரவேற்றுள்ளதாகச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சினிமா டிக்கெட்டை ஆன் லைன் மூலம் தமிழக அரசே விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சார்பில் பாரதிராஜா, ஐசரி கணேஷ், கே.ராஜன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிட்ம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தனியார் டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் அதிகமாக வசூலிப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அரசே ஆன் லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய முன்வந்துள்ளதாகக் கூறினார். ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தைத் திரைத்துறையினர் வரவேற்றுள்ளதாகவும், இதனைச் செயல்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் கடம்பூர் ராஜு கூறினார்.