கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு!

கொரோனாவால் தமிழ் சினிமா படப்பிடிப்பு முடங்கியதால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இன்னும் 2 மாதத்திற்கு பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் முன்பு போல் திரைத்துறை மீண்டு எழுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் எப்போதுமே பிரிக்க முடியாது. குறிப்பாக எந்த பண்டிகை வந்தாலும் நம் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது திரையரங்குகள் தான். நம் அபிமான நட்சத்திரங்களின் படங்களை திரையரங்கில் காணும்போது ரசிகர்கள் எழுப்பும் விசில் சத்தமும், கரவொலியும் நம்மை ஓர் மாய உலகிற்கு அழைத்து செல்லும்..

ஆனால் இந்த கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது கொரோனா. ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டு 120 நாட்களை கடந்துவிட்டது. விண்ணை பிளக்க செய்த விசில் சத்தங்கள் இப்போது இல்லை. தன்னை மறந்து மனிதர்கள் எழுப்பிய சிரிப்பலைகள் ஓய்ந்து விட்டன. கட் அவுட்களாலும், கூக்குரல்களாலும் மூச்சிரைத்த திரையரங்குகளில் இப்போது மயான அமைதி நிலவுகிறது.

திரையரங்குகள் முடங்கியுள்ளதால் வாடகை கொடுக்க முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.. மறுபக்கம் கடன் வாங்கி எடுத்த படங்களை திரையிட முடியாததால் வட்டி கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.. துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலையில்லாதால் வாழ்வாதாரம் இழந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு குதூகலமான ஆண்டாக அமைந்தது. ஆண்டின் துவக்கம் முதலே பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாகின. 2019-ல் மட்டும் 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் அவற்றில் பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்ததால் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் நல்ல லாபம் பார்த்தனர். ஆனால் 2020-ம் ஆண்டு இதற்கு நேரெதிர். ஜனவரி முதல் மார்ச் வரை 48 படங்களே வெளியாகின.

அதன் பின் கொரோனா அச்சுறுத்தலால் ஒட்டுமொத்ததுறையுமே ஸ்தம்பித்து நிற்கிறது… விஜயின் மாஸ்டர், சூர்யாவின் சூரரை போற்று, தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்கள் எப்போது ரிலீஸ் என தெரியாமல் வரிசை கட்டி நிற்கின்றன. மறுபுறம் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை போன்ற 40-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு பாதியில் நிற்பதால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். 120 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடக்காததால் தமிழ் சினிமாவுக்கு சுமார் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

கொரோனா பாதிப்பால் தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து முன்னணி நடிகர், நடிகைகள் தங்களின் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.. தற்போதைய சூழல் மாறி திரையரங்குகளை திறக்க 2 மாதத்திற்கும் மேல் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.. இந்த தடைகளை எல்லாம் தாண்டி தமிழ் சினிமா புத்துயிர் பெற்று மீண்டு வருவதை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் கோடிக்கணக்கான ரசிகர்கள்… ஆனால், அவர்களின் ஆசை நிறைவேற கொரோனா கட்டுக்குள் வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Exit mobile version