கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரேசிலில் 230 அடி உயரத்தில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் ஒளியூட்டப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கோலாகல விழாக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக் தயாரிப்பு மற்றும் விதவிதமான கிறிஸ்துமஸ் மரம் அமைக்கும் பணியும் தீவிரம் அடைந்து வருகிறது.
இதனிடையே ரியோ டி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற பிரபலமான சுற்றுலாப் பகுதியில், உலோகங்களைக் கொண்டு 230 அடி உயரத்தில் கண்ணைக் கவரும் வகையில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மரமானது தண்ணீருக்கடியில் இருந்து 11 தளங்களை ஏற்படுத்தி அதன்மீது நிறுவப்பட்டது ஆகும்.9 லட்சம் எல்.இ.டி விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மரமானது, 8 வெவ்வேறு வகையிலான வண்ணங்களில் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரி 6 வரை ஒவ்வொரு இரவும் இந்த கிறிஸ்துமஸ் மரம் ஒளிர விடப்படும். இது ரியோ டி ஜெனிரோவின் மூன்றாவது பெரிய கலாச்சார நிகழ்வாகும்.
230 அடி உயரம் உள்ள மரமானது கண்ணைக் கவரும் வகையில் ஒளிர விடப்பட்டு, வாண வேடிக்கையாகப் பல வண்ணங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படும் இந்நிகழ்வினைக் காணப் பலரும் ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக கௌசல்யாசேகர்..