தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் அமைத்தும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புகழ்பெற்ற சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர்கள் பரிமாறி கொண்டனர்.


நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண மின் விளக்குகளால் நள்ளிரவில் ஜொலித்தது. பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலியின் போது இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தி வாசிக்கப்பட்டது. குடிலில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்து மகிழ்ந்தனர். சிறப்பு பிரார்த்தனையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் வேளாங்கண்ணி பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் நள்ளிரவு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு எழுச்சிக்கு பிறகு இயேசு குழந்தையாக அவதரித்து காட்சி அளித்தார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆலயம் சீரமைக்கப்பட்டு தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரித்து ஜொலித்தது. கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை இயேசுவின் வரலாறு மற்றும் நற்செய்திகள் தெரிவிக்கப்பட்டது. பின்னர், குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வந்தனர்.

Exit mobile version