சின்னத்தம்பி யானை குறித்து யானைகள் ஆராய்ச்சி நிபுணர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளதையடுத்து இதுகுறித்த விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சின்னத்தம்பி யானை விவசாய பயிர்களுக்கும், மனித உயர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதால் அதை முகாமில் அடைக்க வேண்டும் என்று விலங்குநல ஆர்வலர்கள் அருண் பிரசன்னா மற்றும் முரளிதரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவிருந்தது.
இந்நிலையில், சின்னத்தம்பி யானையை முகாமிற்கு அனுப்புவது தொடர்பாக நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் வனத்துறை அலுவலர் உள்ளிட்டோர், சின்னத்தம்பி யானையை முகாமிற்கு அனுப்புவது தொடர்பாக நாளை யானைகள் ஆராய்ச்சி நிபுணர் அஜய் தேசாய், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதால், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என முறையிட்டனர்.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர். சின்னத்தம்பி யானைக்கு காட்டில் கிடைக்கும் இயற்கை உணவுகளை கொடுத்து பழக்கி, ஏன் மீண்டும் காட்டுக்கு அனுப்ப கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.