திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த 5 தினங்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி அப்பகுதியில் உள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்திற்கு வந்த சின்னத்தம்பி யானை, கடந்த 5 தினங்களாக அங்குள்ள விளைநிலங்களில் கரும்பு மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்பொழுது சின்னத்தம்பி யானை கண்ணாடிபுதூரில் சுற்றி வருகிறது.
இதனிடையே, சின்னத்தம்பி குறித்து சம்பவ இடத்தில் கூடுதல் தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க, வெங்கடேசனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். சின்னத்தம்பி சேதப்படுத்திய பயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வெங்கடேசன் உறுதி அளித்தார்.
மேலும் கும்கி யானைகளின் உதவியுடன் சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் கூறினார்.