திருப்பூர் அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூர் பகுதியில் 14 வது நாளாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பக கள பாதுகாப்பு இயக்குனர் கணேஷ் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார். கண்ணாடிப்புதூர் பகுதியில் உள்ள வாழை மற்றும் கரும்புத்தோட்டத்தில் பதுங்கியிருக்கும் யானையானது மாலை 4.30க்கு வெளியே வந்தது. ஆனால் அதிகாரிகளையும் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களையும் பார்த்த சின்னதம்பி யானை மீண்டும் கரும்புத்தோட்டத்திற்குள் சென்று விட்டது. தினமும் 4 மணி அளவில் வெளியே வரும் யானையானது, வாழை மற்றும் கரும்புகளை தின்று விட்டு வெளியே வர மறுக்கிறது. இந்த நிலையில் சின்னத்தம்பி யானையை பிடிக்கும் திட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கள பாதுகாப்பு இயக்குனர் கணேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து யானையை கண்காணிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.