கும்கி யானையுடன் கொஞ்சி விளையாடிய சின்னத்தம்பி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த சில தினங்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை, தன்னை வனப்பகுதிக்கு விரட்ட வந்த கும்கி யானை கலீமுடன் கொஞ்சி விளையாடிய காட்சி அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த வாரங்களில் டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கோவை மற்றும் திருப்பூரில் கடந்த சில தினங்களாக சுற்றித்திரிந்து வருகிறது. சின்னத்தம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துனையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகில் உள்ள புதரில் கடந்த சில தினங்களாக சின்னத்தம்பி சுற்றி வருகிறது. நேற்று சுமார் 10 மணிநேரத்திற்கு மேல் அந்தப்பகுதியில் ஓய்வு எடுத்தது. பின்னர் வழக்கம்போல அப்பகுதியில் உள்ள கரும்புக் காட்டில் கரும்புகளை ருசிபார்த்தது.

இந்நிலையில் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றக்கூடாது என சமூக ஆர்வலர் அருண் பிரசாத் தொடர்ந்த வழக்கில், அதனை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையை கைவிட்டு, அதனை அதன் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தன்னை வனப்பகுதிக்குள் விரட்ட வந்த கும்கி யானை கலீமுடன் சின்னத்தம்பி கொஞ்சி விளையாடியதை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

Exit mobile version