கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சின்மயி.
இதுகுறித்து அவரது தாயாரிடம் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி நடத்திய பிரத்யேக நேர்காணலின் போது அவர் கூறியதாவது, கவிஞர் வைரமுத்துவை பழிவாங்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை.
சின்மயிக்கு மிரட்டல் வந்ததாலேயே கோபத்தில் அவர் உண்மையை டிவிட்டரில் பதிவிட்டார். கவிஞர் வைரமுத்து கவிஞர். தமிழ் அறிஞர். அந்த மரியாதை எப்போதும் உள்ளது. ஆனால் அவர் பாலியல் ரீதியாக என் மகளை அழைத்தது உண்மை.
அந்த சம்பவத்தின் போது நானும் உடனிருந்தேன். மீ டூ என்ற சமூக இயக்கத்தில் கருத்து தெரிவித்த சின்மயியை சிலர் மிரட்டினார்கள். அதனால் கோபப்பட்ட சின்மயி கவிஞர் வைரமுத்து குறித்து பகிரங்கமாக எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டார்.
வைரமுத்து சுவிட்சர்லாந்தில் ஒருமுறை மற்றும் தனது அலுவலகத்தில் ஒரு முறை என இரண்டு தடவை அது போல தவறாக நடக்க முயன்றார். இந்த விஷயத்தில் அவர் கிரிமினல் அல்ல. பலவீனமானவர். அசடு. அதனால் தான் திரும்ப திரும்ப செய்கிறார்.
இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த காரணம் சமூக விழிப்புணர்வுக்காகவே. இனிமேல் பணக்காரர்கள், அரசியல் சக்தி உள்ளவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் பெண்களிடம் தவறாக நடக்க பயப்பட வேண்டும்.
இனிமேல் அப்படி பயப்படுவார்கள் என நம்புகிறோம். 2010ம் ஆண்டு சாதிய ரீதியான பிரச்னையை சின்மயி மீது கிளப்பிய போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எங்களை பாதுகாத்தார். சினிமா துறையில் தற்போது இளைஞர்கள் இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் போன்று நன்றாக செயல்படுகிறது. பாலியல் ரீதியான பிரச்னைகள் சினிமாவில் இல்லை. சின்மயி நல்ல பெண். அவளை மிரட்டினால் கோபப்பட்டு என்ன செய்வாள் என்று தெரியாது. நான் என் மகளுக்கு பக்க பலமாக இருக்கிறேன்.
இப்போது எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. சின்மயி கணவர் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வைரமுத்துவின் பெயரை கெடுக்க வேண்டும் என்று இதை செய்யவில்லை. இனிமேல் யாருக்கும் பாலியல் தொந்தரவு இருக்க கூடாது என்பதற்காகவே இதை வெளிப்படையாக அறிவித்தோம். இவ்வாறு கூறினார்.