சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தே மீள முடியாமல், உலகநாடுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில், விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில், ராக்கெட்டை அனுப்பி மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது சீனா. சர்வதேச நாடுகளை விழிபிதுங்க வைத்துள்ள சீனாவின் அந்த ராக்கெட் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இணைந்து, விண்வெளியில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைத்து, ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக, சீனா தனியாக டியூன்ஹி என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, சீனா கடந்த மாதம் 29ஆம் தேதி, லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் மூலம் கலம் ஒன்றை அனுப்பியது.
விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு சில வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையிலான சீனாவின் முயற்சி, சர்வதேச நாடுகளின் பாராட்டை பெற்றது. ஆனால், அந்த பாராட்டையும், தன்னுடைய பெருமையையும், தனது இழிவான நடவடிக்கையால் சீனா குறைத்துக் கொண்டது.
இந்தியாவுடன் சமீபகாலமாக மோதலை கடைபிடித்து வரும் சீன கம்யூனிச அரசின் ஆன்லைன் பத்திரிக்கை, ஒரு மோசமான பதிவை வெளியிட்டது.
லாங் மார்ச் 5 பி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் காட்சியையும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை, கவச உடை அணிந்து எரியூட்டும் காட்சிகளையும் ஒப்பிட்டு, china lightening fire versus India lightening fire என பதிவிட்டு இருந்தது.
கொரோனாவின் 2-வது அலை பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா கடுமையாக போராடி வரும் வேளையில், இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில், திட்டமிட்டு வெளியிடப்பட்ட இந்த பதிவுக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதையடுத்து, அந்த பதிவை, குறிப்பிட்ட ஆன்லைன் பத்திரிகை நீக்கியது.
ஆனால், சீனாவின் இந்த ஆணவ போக்கிற்கு, அந்த நாடு அனுப்பிய லாங் மார்ச் 5பி ராக்கெட் முற்றுப்புள்ளி வைத்தது. குறிப்பிட்ட கலனை விண்ணில் நிலை நிறுத்தி விட்டு, பூமிக்கு திரும்பும் என சீன விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்பட்ட லாங் மார்ச் 5 பி, கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி, வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
பொதுவாக பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் எந்த பொருளும் காற்றுடன் ஏற்படும் உராய்வில் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் லாங் மார்ச் 5 பியின் பாகங்கள், அதிக உருகு வெப்பநிலையை கொண்டுள்ளதால், அப்படியே பூமியின் மீது விழ வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 டன் எடை கொண்ட இந்த ராக்கெட், நாளை பூமியின் மீது விழ வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இதே ரக ராக்கெட், ஐவரி கோஸ்ட் நாட்டில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்து சேதப்படுத்தியது.
தற்போதைய ராக்கெட்டும் அதே போன்று ஏதாவது ஒரு நாட்டின் மீது விழுந்தால், கடுமையான சேதம் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சீனா அனுப்பிய கொரோனா, உலக நாடுகளை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கும் போது, அதற்குள் மற்றொன்றா என உலக நாடுகள் கவலையுடன் கேள்வி கேட்கின்றன. சிறிது காலத்திற்கு தனது அனைத்து விஷம முயற்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு, சீனா அமைதியாக இருக்க வேண்டும் என்பதே, சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.