நேபாளம் – சீனா இடையே வணிகம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான 20 உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளன.
சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னைப் பயணத்தை முடித்துக் கொண்டு 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேபாளத்தின் காத்மண்டு நகருக்குச் சென்றார். விமான நிலையத்தில் நேபாளத்தின் அதிபர் வித்யாதேவி பண்டாரி பூங்கொத்துக் கொடுத்து அவரை வரவேற்றார். அதன் பின் இருநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் குழுவினர் பேச்சு நடத்தினர்.
இந்த சந்திப்பில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, எல்லைப்பகுதி நிர்வாகம், வணிகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே 20 உடன்பாடுகள் கையொப்பமாகின.
நேபாளத் தலைநகர் காத்மண்டில் இருந்து திபெத்தின் கயிரான் நகருக்கு 70 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை அமைப்பதும் இந்த உடன்பாடுகளில் ஒன்றாகும். நேபாளத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக அடுத்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதியளித்தார்.
இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஷி ஜின் பிங் நேற்று பெய்ஜிங் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஒருவர் நேபாளத்துக்குச் சென்றிருப்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.