ஏற்கனவே பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் சீன அரசு, தற்போது இசுலாமியப் பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் பிள்ளைகளைப் பிரித்து உறைவிடப் பள்ளிகளில் எனும் சிறைகளில் அவர்களை அடைத்து வளர்ப்பதும் தெரியவந்துள்ளது. அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகக் காண்போம்…
சீனாவில் வீகர் இனத்தைச் சேர்ந்த இசுலாமியர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இவர்களின் எண்ணிக்கை அதிகம். சீனாவை ஆளும் பொதுவுடமைக் கட்சி இவர்களின் மத நம்பிக்கையையும் துருக்கி போன்ற அருகிலுள்ள இசுலாமிய நாட்டினருடனான இவர்களின் நட்பையும் விரும்பவில்லை. இதனால் இந்த மக்களின் அடுத்த தலைமுறையினரை அடையாளமற்றவர்களாக வளர்த்து, வீகர் இனத்தினரை காலப் போக்கில் அழிக்கும் வேலையை சீன அரசு மேற்க் கொண்டு வருகிறது.
சீன அரசின் இந்த மனித விரோத நடவடிக்கை குறித்த ஆய்வுகளை பிபிசி போன்ற ஊடகங்களும், பல ஐரோப்பிய ஆய்வாளர்களும் வெளியிட்டு வருகின்றனர். அந்த ஆய்வுகளின்படி, தொழில் பயிற்சிக் கூடங்கள் எனப்படும் அடக்குமுறைகள் நிறைந்த பகுதிகளில் வீகர் இனத்தைச் சேர்ந்த வயதுவந்தவர்களை சீன அரசு அடைக்கிறது. இந்த இடத்தில் தொழில் பயிற்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதாக சீன அரசு கூறினாலும், ’தங்கள் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்திவர்கள் மட்டுமே அங்கு அடைக்கப்படுகிறார்கள்’ – என்று சீனாவில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடைத்து வைக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளையும், அரசால் கடத்தப்பட்ட குழந்தைகளையும், சீன அரசு உண்டு, உறைவிடப் பள்ளிகள் – என்று பெயரிடப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்த இடங்களில் அடைக்கின்றது.
இந்த உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ளவர்கள் சீன மொழியைத் தவிர வேறு எதையும் பேசாதவர்களாக, தங்கள் பெற்றோர்களையோ வெளி உலகத்தையோ அறியாதவர்களாக வளர்க்கப்படுகிறார்கள். சில பள்ளிகள் முழுமையான கண்காணிப்பின் கீழ் உள்ளன. சில பள்ளிகளில் வெளிப்புறச் சுவர்களை மாணவர்கள் தொட்டால் எச்சரிக்கை மணி அடிக்கும், சில பள்ளிகளில் சுவர்களை மாணவர்கள் நெருங்கினால் 1 ஆயிரம் வால்ட் மின்சாரம் அவர்களைத் தாக்கும்!.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வீகர் இன சிறார்களை சீன அரசு உண்டு, உறைவிடப் பள்ளிகளில் அடைப்பது அதிகரித்து உள்ளது. சீன அரசின் புள்ளி விவரங்களின் படி, கடந்த 3 ஆண்டில் நாடெங்கும் சீன மாணவர்கள் பள்ளிகளில் சேரும் விகிதம் 8% மட்டுமே உயர்ந்துள்ள போது, ஜின்ஜியாங் மாகாணத்தின் உய்கர் பகுதியில் மட்டும் அது 148% உயர்ந்து உள்ளது. 2017ஆம் ஆண்டில் ஜின்ஜியாங் மாகாணத்தில் பள்ளிக்கு சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென்று 5 லட்சம் உயர்ந்தது என்கிறது சீன அரசு. இவர்களில் 90% பேர் வீகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் – என்பதில் இருந்து இதன் பின்னுள்ள உண்ஐயை நாம் அறியலாம்.
இப்படியாக சீன அரசு அடையாளமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி வருவது மனித உரிமை செயல்பாட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெடுங்காலமாகவே சீனாவின் தொடர் மனித உரிமை மீறல்கள் உலக அளவில் கடும் கண்டனங்களைப் பெற்று வந்தாலும், ஆயுத பலத்தையே நம்பியுள்ள சீனா, தனது மனித உரிமை மீறல்கள் எதையும் குறைத்துக் கொள்ளவே இல்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது.