சீனாவின் நடைபெறும் சர்வதேச ஐஸ் திருவிழா சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பனிச் சிற்பங்களை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சீனாவின் வடகிழக்கில் அமைந்துள்ள ஹர்பின் நகரில் உடலின் அனைத்து பாகங்களும் விரைத்துப் போகும் அளவுக்கு குளிர்காற்று வீசும். மைனஸ் 16 டிகிரிக்கும் கீழ் வெப்பம் நிலவுவதால் குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்து ஐஸ்கட்டிகளாக காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் கிடைக்கும் மிதமிஞ்சிய ஐஸ் கட்டிகளைக் கொண்டு கண்கவர் சிற்பங்களாக மாற்றி உலகின் மிகப்பெரிய ஐஸ் திருவிழாவை சீனா நடத்தி வருகிறது. இந்தக் கண்காட்சியில் சிற்பங்களை செதுக்கும் பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் ஈடுபட்டனர்.
சொங்குஆ நதியின் அருகில் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு என்ற மிகப்பெரிய பனிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 150 மீட்டர் உயரத்திற்கு பனியால் தரைத்தளம் அமைக்கப்பட்டு அதன் மீது பூங்காவை கட்டமைத்துள்ளனர். இங்கு பிரம்மாண்டமான பனிச்சிற்பங்கள், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. சீனாவில் மிகவும் புகழ்பெற்ற பாம்பு கறி உள்ளிட்ட உணவுகளை இங்கு ருசிக்கலாம். இவற்றைத் தவிர விதவிதமான பனிச் சறுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பனிச் சிற்பங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் வண்ண வண்ண நியான் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஹார்பின் நகரின் பொதுமக்களை ஈர்க்கும் பகுதியாக துருவ அருங்காட்சியகம் உள்ளது. துருவப் பகுதியின் நில அமைப்புகளின் மாதிரி அங்கு வசிக்கும் விலங்குகள், இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளன. சன் தீவு கப்பல், டாக்சியங்யான் மலை, திமிங்கலங்களுக்கான வளைகுடா, கடற்சிங்கங்கள், வெள்ளை ஓநாய்கள் உள்ளிட்ட பல்வேறு விநோதமான காட்சிகளை காணலாம்.
சர்வதேச ஐஸ் திருவிழாவில் நடைபெறும் திருமணங்கள் மிகவும் பிரபலம் . ஒவ்வொரு வருடமும் ஏராளமான ஜோடிகள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த வருடம் இதுவரை 50 க்கும் மேற்பட்ட ஜோடிகள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். வெள்ளைநிற உடையில் மணமக்கள் பவனி வரும் காட்சிகள் காண்போர் மனதை கொள்ளை கொள்கின்றன. இந்த ஜோடிகளுக்கு கண்காட்சியில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது
துவக்கத்தில் சீன அளவில் மட்டுமே பிரபலமாகியிருந்த இக்கண்காட்சி நாளடைவில் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் அந்நாட்டின் வருவாயும் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் விதவிதமான பிரம்மாண்டமான சிற்பங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருவதால் சீனாவின் வருவாயும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு 224 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை அழகான இடத்தைக் காண்பதற்கு அனைவருக்கும் ஆவல் இருக்கத் தானே செய்யும்.