மசூத் அசாரைக் கைவிட்ட சீனா… காரணங்கள் என்ன?

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசு ஐ.நா.சபையில் கோரிக்கை வைத்து வந்த நிலையில் நேற்று அந்தக் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதுவரை மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா.வில் 4 முறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோதும், வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி மசூத் அசாரைக் காப்பாற்றிய சீனா இப்போது அவரைக் கைவிட்டதே இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம். சீனாவின் மன மாற்றத்துக்குப் பின்னணிகளாக அரசியல் வல்லுநர்கள் எதையெல்லாம் கூறுகிறார்கள் பார்ப்போம்… 

பிரதமர் மோடியின் சீனப் பயணம்:

கடந்த 2018ஆம் ஆண்டில் சீனாவுக்கு 2நாட்கள் அரசு முறைப் பயணம் செய்தார் பிரதமர் மோடி, அப்போது மசூத் அசார் குறித்தும் பேசப்பட்டு உள்ளது. இந்நிலையில் மசூத் அசாரின் தீவிரவாத அமைப்பு புல்வாமா தாக்குதலிலும் ஈடுபட்டதால், சீனாவுக்கு இந்திய அரசால் அதிக அழுத்தம் கொடுக்க முடிந்துள்ளது.

அயல்நாடுகளின் ஒத்துழைப்பு:

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தன. மீண்டும் மீண்டும் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை அவை ஐ.நா.வில் கொண்டு வந்து, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தின.

சீனாவின் அச்சம்:

ஐ.நா.வில் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளில் சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் மசூத் அசாரை ஆதரிக்கவில்லை, இந்நிலையில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை பொது வாக்கெடுப்புக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டன. அப்போது சீனா மசூத் அசாருக்கு ஆதரவாக வாக்களித்தால் சீனா பயங்கரவாத ஆதரவு நாடாக பார்க்கப்படும் என்பதாலும் சீனா முந்திக் கொண்டது.

இலங்கையில் நடந்த தாக்குதல்:

சீன ஆதரவு நாடான இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், சீனா இன்னொரு தீவிரவாத அமைப்பை ஆதரிப்பது பொருத்தமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. இதனாலும் சீனா தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்தது.

மசூத் அசாரால் இனி பயன் இல்லை:

பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இனி அவரால் பயனில்லை என்பதால், மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் பெரிதாக எதிர்க்கவில்லை என்று கருதப்படுகிறது.

Exit mobile version