குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூரு ரேகாவிற்கு 6 ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியானதை அடுத்து விருப்ப ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர் அமுதவல்லி அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன், மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட பர்வீன், நிஷா, லீலா, அருள்மணி, செல்வி என 8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி செவிலியர் சாந்தி, நந்தகுமார், பெங்களுரை சேர்ந்த இடைத்தரகர் ரேகா ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ரேகாவிற்கு நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை ஜூன் 6 ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.