நாமக்கல் குழந்தை கடத்தல் விவகாரத்தில் 9வது நபராக பெங்களூருவை சேர்ந்த ரேகா என்ற இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல்லில் குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடைத்தரகர்கள் பர்வீன், அருள்சாமி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட அமுதா, முருகேசன் மற்றும் இடைத்தரகர்களை சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளை விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொல்லிமலையில் பிறந்த அனைத்து குழந்தைகளின் விவரங்களும் சரி பார்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ள நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக பெங்களூருவை சேர்ந்த ரேகா என்ற இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.