குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை… உண்மையில் இது நூறாண்டுகால பிரச்சனை அல்ல…

இந்திய ஒன்றியத்தை பன்னெடுங்காலமாக படாத பாடு படுத்தும் பிரச்சனைகள் ஆயிரம் உண்டு.. இதில் இன்றோடு 100 ஆண்டைத்தொடும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை கவனிக்கப்பட வேண்டியது… 100 ஆண்டுகள் என்பது கூட வெறும் கணக்குக்காகத்தான்.. உண்மையில் இது நூறாண்டுகால பிரச்சனை அல்ல.. நூற்றாண்டுகளின் பிரச்சனை.. 

என் குழந்தை வேலை ஏதும் பார்க்கவில்லையே.. சரியான கல்வி என் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதே என்கிறீர்களா??.. அப்படியென்றால் உங்களுக்கு என் பாராட்டுகள்.. ஆனால், உங்கள் ஒரு வீட்டுக்குள் தர முடிந்த இந்த உத்தரவாதத்தை உங்கள் ஊருக்குள் தரமுடியுமா??… வேண்டாம்.. முழுமையாக நீங்கள் வசிக்கும் தெருவுக்குள் இந்த உத்தரவாதத்தை தர முடியுமா என்றால் ஆம் என்ற பதில் அத்தி பூப்பது போலத்தான்… 

உண்ண, உடுக்க, உறங்க என அடிப்படை தேவைகள் பூர்த்தியான உங்களுக்கு சரி… ஆனால் கால்வயிறு கஞ்சிக்கும் வழியற்றவன் எப்படி கல்வி குறித்து யோசிக்க முடியும்… ஆம். இன்னபிற காரணங்கள் ஏராளம் இருந்தாலும், பெருகி வரும் குழந்தை தொழிலாளர் முறையின் பிரதான காரணம் வறுமை ஒன்றுதான்…

இந்த வறுமையால்தான் உலகமுழுவதும் இருக்கும் 190 கோடி குழந்தைகளில் ஏறக்குறைய 22 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாகவே வாழ்கின்றனர்… இதில் 15 கோடிக்கும் மேற்பட்டோர் கட்டாயத்தின் பேரில் அடிமைகளைப் போல வேலை செய்கின்றனர் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தரும் கூடுதல் தகவல்…

1919 ம் ஆண்டு தொடங்கி 2019 வரையில், ஆண்டுவாரியான கணக்கெடுப்புகளை ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும். வீரியத்தில் இந்த பிரச்சினை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது…….

மழலைச்செல்வம் என்ற சொல்லை தவறாக புரிந்துகொண்டோமோ என்னவோ?

சரி என்னதான் தீர்வு…
எந்த ஒன்றிலும் தனிமனித பிரக்ஞையும் அதன் உறுதிப்பாடுமே தீர்வு..

தன்னிறைவு பெற்ற குழந்தைகளின் குடும்பங்கள் தங்கள் சுயநலத்தை கொஞ்சம் விரிவுபடுத்திக்கொள்ளலாம்..

அதாவது, உங்கள் குழந்தைக்கு உயர்ந்த ரக காட்டன் வாங்குவதோடு, பக்கத்து வீட்டையும் பார்க்கலாம்.
அங்கே கிழிந்த, பழைய சட்டைக்கு மாற்றில்லாமல் பள்ளி செல்வதை நிறுத்தப்போகும் இன்னொரு குழந்தைக்கும் சேர்த்து யோசிக்கலாம்…

பள்ளிகள் தொழிற்சாலைகளை விட கடுமையாக இருப்பதைத்தான் காட்டுகின்றன இவையெல்லாம்.. பள்ளிகள் மாணவர்களின் மனமகிழ் மையங்களாக அமையும்படி மறுகட்டமைப்பு செய்யலாம்… 

கடைசியாக, வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கிறது விழிப்புணர்வு… உண்மையில் விழிப்புணர்வு என்பது இலக்கு நோக்கி செயல்படுதல் என்னும் புரிதலை ஏற்படுத்தலாம்… வறுமை, அறிக்கைகளால் ஒழியபோவதில்லை என்பதை உணர்ந்துகொண்டு அரசும், அரசு சாரா இயக்கங்களும் செயல்படலாம்… குழந்தைகள் நமக்குமானவர்களே ஒழிய, நமக்கு மட்டுமானவர்கள் அல்ல…..

Exit mobile version