நியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபர்

நியாய விலைக்கடைக்கு சென்ற சிறுமியை கடத்திய வாலிபரை 48 மணிநேரத்தில் கண்டுபிடித்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த தீவட்டிப்பட்டி காவல்துறையினருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி 2 தினங்களுக்கு முன் கடைக்கு அரிசி வாங்கச் சென்றுள்ளார். கடைக்குச் சென்ற சிறுமி பல மணி நேரமானபோதும் வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் கூலி வேலை பார்ப்பவர்கள். சிறுமி வீடு திரும்பாத காரணத்தால் பயந்துபோன பெற்றோர், சம்பவம் குறித்து தீவெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரில், காடையாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சேலம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் விளைவாக, சிறுமியை அடைத்து வைத்து ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த கோவிந்தராஜைக் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமி அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது, அவரின் வாயில் துணியை வைத்து கோவிந்தராஜ் கடத்தி சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கடத்தி சென்ற கோவிந்தராஜ், சிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனடிப்படையில், கோவிந்தராஜ் மீது தீவெட்டிப்பட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பட்டபகலில் சிறுமியை வாயில் துணியை அடைத்து கடத்தி சென்ற இளைஞரை 48மணிநேரத்தில் கண்டுபிடித்து சிறையில் அடைத்த தீவட்டிப்பட்டி காவல்துறையினருக்கு சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Exit mobile version