ரமலான் ஏற்பாடு குறித்து இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

ரமலான் மாதத்தின் சிறப்புத் தொழுகைகளை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் இஸ்மாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு சில நாட்களில் தொடங்க இருக்கிறது. ரமலான் காலத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்குவது குறித்த அலோசனைக் கூட்டம், நேற்று, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சன்னி பிரிவு தலைமை ஹாஜி சலாவூதீன் முகம்மது அய்யூப், ஷியா பிரிவு தலைமை ஹாஜி குலாம் முகம்மது உட்பட இஸ்லாமியத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தலைமை ஹாஜியின் பிரதிநிதி நூருல் அமீன், இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளை வீட்டிலிருந்தே தொழுது கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரத்து 450 டன் பச்சை அரிசி வரும் 19 ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும், பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்காமல் அரிசியாக வீடுகளில் சென்று தன்னார்வலர்கள் வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version