திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், வரும் 7 மற்றும் 9ம் தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், 2, 4 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளவிருந்த முதலமைச்சரின் சுற்றுப்பயணம், 7,9 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 7ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 9ஆம் தேதி காலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர், அன்று மாலை விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.