கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் 17ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிலையில், மீண்டும் 17ம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார். அதன்படி வரும் 17ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திலும், 20ம் தேதி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டத்திலும், 21ம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வின் போது, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர், பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்க உள்ளார்.