நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 38 ஏக்கர் பரப்பளவில் 338 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். அப்போது, கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, ஆட்சியர் மெகராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் எர்ணாபுரத்தில் 200 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில், நோயாளிகளுக்கு யோகா பயிற்சி உட்பட பல்வேறு சிகிச்சை முறைகளும் அளிக்கப்படவுள்ளன. நோயாளிகளுக்கு அளிக்கப்படவுள்ள சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.