தமிழகத்துக்கு நிதி வழங்க வேண்டும்.. பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது, மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கெனவே கோரியிருந்த 3 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், 2-வது தொகுப்பு நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் தமிழகத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும் எனவும், கொரோனாவை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நெல் கொள்முதல் செய்வதற்காக நிலுவையில் உள்ள மானியத் தொகை ஆயிரத்து 321 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version