பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு!

கொரோனா நோய் தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்றை குணப்படுத்துவதற்கோ அல்லது தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத சூழலில், பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18வயது முதல் 65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும், நோய் தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு 14வது நாள் பிளாஸ்மா தானம் செய்ய தகுதியுடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்மா தானம் செய்தவர்கள் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2வது முறையாக தானம் செய்யலாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே 2வது பிளாஸ்மா வங்கியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 கோடி மதிப்பில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, சேலம் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எவ்வித தயக்கமும், பயமும் இல்லாமல் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version