தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, ஃபெடக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பெரட்ரிக் ஸ்மித், யூபிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டேவிட் அப்னே ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இதேபோன்று, முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சவுதி அரெம்கோ நிறுவனத்தின் தலைவர் அமீன் நாசர், எக்ஸன் மொபில் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாரன் உட்ஸ், CPC கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜியா ருயே ஊ ஆகியோருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கச் சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்கிடும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால், இந்தியாவுக்கு இடம்பெயரும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தானதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளதை கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.