அத்திவரதர் தரிசனத்திற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி

அத்திவரதர் தரிசனத்திற்காக இரவு பகல் பாரமல் உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் தேவராஜ சுவாமி திருக்கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளிய அத்திவரதரின் வைபவம் கடந்த மாதம் 1 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. இதன் தரிசனத்திற்காக தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்த அனைத்து வசதிகளினால், இந்தியா முழுவதிலுமிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், இதற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தரிசனத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சிறப்பாக பணியாற்றியதாக கூறியுள்ளார். அத்துடன் தேசிய மாணவர் படையும், தன்னார்வலர்களும் ஒருங்கிணைத்து பணியாற்றியதன் விளைவாக அனைவரும் அத்திவரதரை சிறப்பாக தரிசனம் செய்ததாகவும், இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் நகரின் தூய்மை பணிகளை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களின் பணி மெச்சத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். தனது வேண்டுகோளை ஏற்றும் நிதியுதவியும் ஆதரவும் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், வைபவத்தினை மக்களிடம் சிறந்த முறையில் எடுத்துச் சென்ற பத்திரிக்கை ஊடகத்துறையினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னலம் பாராமல் இரவு பகலும் அயராது உழைத்த அனைத்து துறையினருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version