காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வராது என்று முதலமைச்சர் கூறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக விஜயகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காவிரி டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயத் தொழிலை மேம்படுத்தவும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது சிறப்பானதாகும் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு, பா.ம.க. சார்பில் வரவேற்பு தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நன்றி தெரிவித்தார். மேலும், சேலம் மாவட்டத்தில் சர்வதேச தரம் கொண்ட கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியதற்கும் வரவேற்பு தெரிவித்தார்.