மலைவாழ் மக்களின் நலன் காக்க அதிமுக அரசு என்றென்றும் துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக இன்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சேந்தமங்கலத்தில் மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சருக்கு தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது பேசிய பிரதிநிதி ஒருவர், முதல்முறையாக முதலமைச்சர் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.
அதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மலைவாழ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, சேந்தமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர், திமுக ஆட்சி போல் இல்லாமல், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காப்பதாகவும், தனிமனித சுதந்திரம் காக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.