தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம்

ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார் என கேள்வி எழுப்பி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதே எங்களின் நோக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், மின்துறை, தொழில்துறை ஆகியவற்றில் முதலீட்டை ஈர்க்கவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் 14நாட்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காகச் சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் இருந்து முதலமைச்சர் விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்களும் அதிமுகவினரும் அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். செண்டை மேளம் முழங்க வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் முதலமைச்சரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும், பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவித்தார். வெளிநாட்டில் உள்ள தொழில்துறை முன்னேற்றங்களைப் பார்வையிடுவதுடன், தொழில் அதிபர்களை நேரில் சந்தித்துத் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப் போவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஸ்டாலின் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்பதை இதுவரை சொன்னதேயில்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தான் வெளிநாட்டுப் பயணம் செல்வதை அவர் கொச்சைப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version