தேர்தல் பயத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக முதல்வர் விமர்சனம்

விழுப்புரம் , ஆரணி, திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட கீழ்பெண்ணத்தூரில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், பிரதமர் மோடியின் ஆட்சியில் அண்மை நாடுகள் இந்தியாவை கண்டு அஞ்சும் நிலை இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். ஏரிகள் தூர்வாரும் பணிகளால், குடிநீர் சேமிக்கப்பட்டு வறட்சி காலங்களை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செஞ்சியில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால், உயர் கல்வியில் தமிழகம் நாட்டில் முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார். மாணவர்களின் எதிர்கால நலனுக்கான திட்டங்களையும், பெண்கள் பாதுகாப்பு, கர்ப்பிணி தாய்மார்கள் நலனுக்கான திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

திண்டிவனத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களின் குரல் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்ததாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழக நலனுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் பெறுவார்கள் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

கூட்டேரிபட்டில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலைக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version