உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கியதற்காக, மத்திய அரசிடம் இருந்து தொடர்ந்து 6வது முறையாக, விருது பெற உறுதுணையாக இருந்த மருத்துவப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர், 11வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், முதன்மை மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரத்து 392 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 245 உறுப்புகள் தானமாக பெற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கொரோனா பேரிடர் காலத்திலும், சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்,
6வது முறையாக முதன்மை மாநிலம் என்ற விருதினை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு, தனியார் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் தெரிவித்துள்ளார்.