குழந்தை சுஜித் வில்சன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான் என்ற செய்தி தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுவனை உயிருடன் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அமைச்சர்களுக்கும், வருவாய் நிருவாக ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்புப் பணிகள் மேற்கொண்டும் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் போது, வழிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வருங்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நேராமல் இருக்கப் பொதுமக்கள் தங்கள் நிலங்களில் ஆழ்துளைக் கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். சுஜித் வில்சன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.