கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 100 டன் அரிசியை நிவாரணமாக முதலமைச்சர் பழனிசாமி அனுப்பி வைத்தார்.
அதிமுக சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில் வட சென்னை மாவட்டம் சார்பில் மதுசூதனன் தலைமையில் நிவாரணம் அனுப்பப்பட்டது. அதேபோல் மத்திய சென்னை சார்பாகவும் மற்றும் தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பிலும் தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தென்சென்னை வடக்கு அதிமுக சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு நிவாரணமாக 100 டன் அரிசி அனுப்பப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே அங்குள்ள பொதுமக்களுக்கு தேவையான பாய், தண்ணீர், போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் அதிமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு அரிசியின் தேவை அதிகமாக இருப்பதால் இன்று பல லட்சம் மதிப்பிலான 100 டன் எடைகொண்ட அரசி மூட்டைகள் 5 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.