புரெவி புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
புரெவி புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று நாகை மாவட்டம், நாகூர் தர்கா பகுதியிலும், கருங்கனி பகுதியிலும் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் பார்வையிடுகிறார். பின்னர் பழங்கள்ளிமேடு பகுதியில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி, பாமணி, கொக்கலாடி -அடப்பாறு, சாய்ராம் பள்ளி முகாம், கச்சனம், மேலப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார். அதன்பிறகு, நன்னிலம், குவளைக்கால் பகுதியிலும், கொல்லுமாங்குடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் மயிலாடுதுறையில், பூம்புகார் தொகுதிக்குட்பட்ட நல்லடை பகுதியில் உள்ள விவசாய பகுதிகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார். மாலை முளையூர் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்ட பின்னர், சட்டநாதபுரத்தில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
இறுதியாக, எருக்கூர் பகுதியில் விவசாய பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கிய பின்னர், அணைக்காரசத்திரம் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார்.