2021 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை துவங்கினார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் எஃகுக் கோட்டை என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 43 ஆண்டுகளாக திமுக வெற்றி பெற முடியாத தொகுதியாக எடப்பாடி உள்ளதாக தெரிவித்தார்.

பெரியசோரகையில் தேர்தல் பிரசாரத்தை துவங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை அதிகப்படியாக 31 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமையை பெற்ற ஒரே கட்சி அதிமுக தான் என தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கனவை தனது தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மத்திய அரசின் விருதுகளை குவிந்து வருவதாக கூறிய முதலமைச்சர், புயல், கொரோனா உள்ளிட்ட பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஆட்சிகாலத்தில் இருந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக தான் வெற்றி பெற்று வருவதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என தெரிவித்தார். கடந்த 43 ஆண்டுகளில் திமுகவால் எடப்பாடி தொகுதியை கைப்பற்ற முடியவில்லை என கூறினார்.

தொடர்ந்து, பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்ற நோக்கில், அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் மூலம், வறண்ட ஏரிகள், குளங்கள், ஊரணிகளில் தற்போது நீர் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும், 3 ஆண்டுகளில் தடுப்பணைகள் பல கட்டப்பட்டு கடலில் கலந்து வீணாகும் நீர், சேமிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், திமுக இது போன்ற செயல்களை செய்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.

 

சென்றாய பெருமாளை வணங்கி பிரசாரம் துவங்கிய முதல்வர் : முதல் பிரசாரத்தின் முழு காட்சிகள்

Exit mobile version