ஓணம் திருநாளில், தமிழ்நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மலையாள மொழிபேசும் சகோதர, சகோதரிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ஒருவருக்கொருவர் அன்புகாட்டி, நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார். இந்த திருநாள், நம் வாழ்வில் அமைதி, வளம், ஒற்றுமை மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மலையாள மக்களால் சாதி, மத பேதமின்றி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை குறிப்பிட்டுள்ளார். திருவோணத் திருநாளில், எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மலையாள மொழி பேசும் மக்களுக்கு அதிமுக தலைமை ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். இந்நாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும் என்றும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.