கோவில்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் 2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதே போன்று , திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் பீர்க்கன்காரணையில் உள்ள சூராத்தம்மன் கோயிலில் 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து அறநிலையத்துறையில், செயல் அலுவலர்கள் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட 96 பேரில், முதற்கட்டமாக 10 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Exit mobile version