முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தின் விவரம் வெளியீடு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆகஸ்டு 28ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்று அங்கு சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்துப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையொப்பமாக உள்ளது.

இந்துஜா உள்ளிட்ட தொழிலதிபர்களைச் சந்திப்பதுடன், காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான நிறுவனத்தையும் பார்வையிட உள்ளார். செப்டம்பர் இரண்டாம் தேதி நியூயார்க் செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழகத்தில் தொழிற்சாலைகளை நடத்திவரும் கேட்டர்பில்லர், ஃபோர்டு, ஃபாக்ஸ்கான், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்முனைவோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள கால்நடைப் பூங்காவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிய கலிபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளைப் பார்வையிட உள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும் பார்வையிடுகிறார். செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் துபாயில் தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் பத்தாம் தேதி முதலமைச்சர் பழனிமாசி தமிழகம் திரும்புகிறார்.

Exit mobile version