நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில், 207 கோடியே 56 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, 43 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 13 திட்டப் பணிகளை துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையில், நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிப்பதாக கூறினார். 2ஆயிரத்து 548 சுயஉதவிக்குழுவினருக்கு 762 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது எனவும், நாகை மாவட்டத்தில் மட்டும் 4ஆயிரத்து 347 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கொரோனா சூழலிலும், 28 லட்சம் மெட்ரிக் டன் தானியம் உற்பத்தி செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது என கூறிய முதலமைச்சர், நாகை மாவட்டத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 998 விவசாயிகளுக்கு ஆயிரத்து 51 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
367 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாகையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரே நேரத்தில், 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான் என பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் 50 சதவிகித மாணவர்கள், உயர்கல்வி பயில்கிறார்கள் என கூறினார். நாகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது எனவும், மத்திய அரசின் உதவியுடன், நாகையில் ஜவுளிப்பூங்கா ஒன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.