திருப்பூரில் அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி,பல்வேறுநலத்திட்டங்களுக்கான பணிகளையும் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் ஆயிரத்து 857 புள்ளி 4 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். ஆயிரத்து 63 கோடியில் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டங்கள், 604 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், 52 கோடியில் டவுன்ஹாலில் மாநாடு அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 36 கோடியே 50 லட்சம் மத்திப்பில் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், 18 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதேபோல் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான திட்டங்களையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரவை தலைவர் தனபால், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, 101 பேருக்கு வீட்டுமனை பட்டா, 273 பேருக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, 241 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.