கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கியதால் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதாசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதையடுத்து ஆட்சியை தக்க வைக்க ஆளும் கூட்டணி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. முதலமைச்சர் குமாரசாமி நாளை பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் புதிய அமைச்சரவை அமைக்கும் எனவும் சித்தராமையா அல்லது மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவகுமார் ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் காங்கிரஸ் அரசுக்கு, மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தருமா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.