தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, வெளிநாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் தொடங்க வருமாறு பல்வேறு துறைகளை சார்ந்த முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி வருகிறார். அந்த வகையில், 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ரகூட்டன் கிரிம்ஸன் ஹவுஸ், பி2டபிள்யூ, சீ லிமிடெட், க்யூஓஓ10 பிரைவேட் லிமிடெட், ஷாலண்டோ எஸ் ஈ ஆகிய ஐந்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழல் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை வழங்கும் என்றும் ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் தெரிவித்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.