மக்களவைத் தேர்தல் சூறாவளிப் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பிரசாரத்தை தொடங்கினார். சேலம் மாவட்டம் கருமந்துறையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், சேலம் அதிமுக வேட்பாளர் சரவணன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரை வரவேற்றனர்.
பின்னர், செல்வ விநாயகர் கோயிலில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் வீதிவீதியாக சென்று கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கருமந்துறையில் பிரசாரத்தின்போது பேசிய முதலமைச்சர், அதிமுக அரசின் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் ஏதோ ஒருவகையில் பயன்பெற்று வருவதாகவும் ஆனால், ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதை தடுக்கும் கும்பல் திமுக கும்பல் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
புத்திரகவுண்டம்பாளைம், வாழப்பாடி, அயோத்தியாபட்டினத்த்தில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் எதிரிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.