சிறப்பாக பணியாற்றிய 644 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் விருது

சென்னை எழும்பூரில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் விருது வழங்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறையினரை கௌரவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் காவலர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு களங்கமும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய 644 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் விருதை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.

சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப்பிரிவு உள்ளிட்ட 15 பிரிவுகளை சேர்ந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் விஸ்வநாதன், காவலர்களின் பணி மிகவும் கடுமையானது எனவும், அவர்களின் சிறந்த பணியின் காரணமாகவே பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். சென்னை பெருநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியதற்காகவும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு பணமில்லா அபராத பரிவர்த்தனையை அமல்படுத்தியதற்காகவும் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை காவல்துறைக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version