பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்ட சம்பவத்தில் வெடித்த வன்முறையில், 3 பேர் பலியான நிலையில், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட சமூகத்தை விமர்சித்து, முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எம்எல்ஏ வீட்டில் இல்லாத நிலையில், அவரது வீட்டை முற்றுகையிட்ட கும்பல், கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். மேலும் எம்எல்ஏ வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள், காவல்துறை வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் தடியடி நடத்த கூட்டத்தை கலைத்தனர். வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியான நிலையில், காவல்துறையினர் 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட நவீன் என்பவர் உட்பட 110 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டிஜி ஹள்ளி, கேஜி ஹள்ளி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் 24 கார்களும், 200 இருசக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, இச்சம்பவத்துக்கு முதலமைச்சர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களை அரசு பொறுத்துக் கொள்ளாது என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.