மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை 22ஆம் தேதி தொடங்கினார்.பிரசாரத்தின் 2ஆம் நாளான இன்று வேலூர் மாவட்டத்தில் திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். முதலாவதாக சேலம் இணைப்புச்சாலையில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக அரசின் நலத்திட்டங்களை குறைகூறி திமுக திட்டமிட்டு பொய்யான பிரசாரத்தை கூறி வருவதாக குற்றம்சாட்டினார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை முழுவதும் நிறைவேற்றப்படும் என்றார். அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி மக்கள் நலனுக்காக ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். 15 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு எந்தவொரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டத்தில் கருமந்துறை, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டினம் ஆகிய இடங்களில் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷ்க்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். பின்னர், தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர், நல்லம்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி வாக்குசேகரித்தார்.