தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில், புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் துவக்க விழா நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தமிழ்நாடு அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
புதிய தொழில் கொள்கை 2021 மூலம், அடுத்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி துறையில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் வளர்ச்சியை அடைய, 2030ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்களிப்பை 30 சதவிகிதமாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சியை பரவலாக்கவும், ஊக்குவிக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது.