கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், பருத்தி, கைத்தறி துணி ரகங்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கைத்தறி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, நெசவாளர்கள் வாழ்வு வளம் பெற ஜெயலலிதா அவர்களின் வழியில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, வேலைவாய்ப்பு வாய்ப்பு வழங்கும் நோக்கில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு 4 இணை விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கைத்தறி நெசவினை ஊக்குவிக்கும் வகையில், நிதியுதவி அளிக்க கைத்தறி ஆதரவு திட்டம் உள்ளிட்டவை சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கைத்தறி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், மக்கள் அனைவரும் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.